✅👉குழந்தைப் பருவ ஆஸ்துமா, சுவாச வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும்..!
மழையுடன் கூடிய காலநிலை மற்றும் குளிர் கால நிலையையடுத்து குழந்தைப் பருவ ஆஸ்துமா, குறிப்பாக இன்புளுவன்சா உள்ளிட்ட சுவாச வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் என, லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை ஆலோசகர் சிறுவர் நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
தற்போதைய காலநிலையில் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) அடினோவைரஸ் (Adenovirus) மற்றும் ரைனோவைரஸ் (Rhinovirus ) போன்ற சுவாச வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல் ஆகியவை இதன் பொதுவான நோய் அறிகுறிகளாகும்.
குழந்தை பருவ ஆஸ்துமா குளிர் காலநிலை மற்றும் வைரஸ் காய்ச்சலுக்குப் பிந்திய காலப்பகுதியில் ஏற்படக்கூடிய நோய் அனர்த்தமாகும்.
பாதுகாப்பற்ற உணவு மற்றும் தண்ணீரால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இளைஞர்களுக்கும் பாதுகாப்பற்ற உணவு மற்றும் தண்ணீரால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
மழை தொடர்வதால், ஈக்களின் எண்ணிக்கை அதிகரித்து, உணவு, தண்ணீர் முதலானவற்றின் சுகாதாரமும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவை வயிற்றுப்போக்கு மற்றும் டைபோய்ட் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், ஈக்கள் அதிகமாக இருக்கும் திறந்த வெளிகளில் உணவை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் பரவும் அனர்த்தம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடிக்கும் காய்ச்சல், வயிற்று வலி, கண்கள் மஞ்சளாகுதல் மற்றும் கருமையான சிறுநீர் ஆகியவை இதன் நோய் அறிகுறிகளாகும்.
பாதகமான காலநிலையின் போது நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரிப்பதன் காரணமாக, டெங்கு காய்ச்சலின் அதிகரிப்பும் ஏற்படலாம். மழைக்கு பின் தண்ணீர் தேங்காமல் இருக்க மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மெலியோடோசிஸ் (Melioidosis) என்பது மண் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் பாக்டீரியா தொற்றுக்கள் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பரவக்கூடும். அசுத்தமான மண், காற்று அல்லது நீர் தொடர்பு மூலம் மெலியோடோசிஸ் பரவுகிறது. இதனால் சேற்று அல்லது குட்டை நிரம்பிய நீரில் பொது மக்கள், குறிப்பாக சிறுவர்கள் மிதிப்பதை தவிர்கதுக்கொள்ளுமாறும் டொக்டர் பெரேரா அறிவுறுத்தினார்.
குருநாகல் மாவட்டத்தில் மெலியோடோசிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வீங்கிய நிணநீர் கணுக்கள், கர்ப்பப்பை வாய் நிணநீர் கணுக்கள் மற்றும் நீடித்த காய்ச்சல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
0 Comments